மூன்றாவது சுயமரியாதை மகாநாடு. குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.011931 

Rate this item
(0 votes)

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு இவ்வருஷம் ராமநாதபுரம் ஜில்லாவில் நடத்தப்பட வேண்டுமென்று அந்த ஜில்லா வாசிகளால் ஈரோடு மகாநாட்டில் கேட்டுக்கொள்ளப்பட்டது யாவரும் அறிந்தாகும். அந்தப்படி இவ்வருஷம் மார்ச்சு மாதம் கடைசியிவாவது ஏப்ரல் முதலிலாவது நடை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும். ராமநாதபுரம் ஜில்லாவில் மகா நாடு நடத்துவதற்கு தகுந்த இடம் விருதுநகர் என்றே கருதுகின்றோம். ஏனெனில் ரயில் போக்குவரத்து சவுகரியமும் உர்ச்சாகமும், ஊக்கமும், செல்வமும் பொருந்திய சுயமரியாதை வீரர்கள் மிகுதியும் நிறைந்த நகரமும் மற்றும் அவ்வித வீரர்கள் மலிந்த சுற்றுப்பிரதேசங்களுக்கு மத்திய ஸ்தலமாகவும் மதுரைக்கு 25 மைல் தூரத்தில் மிக சமீபமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜ பாளையம், சிவகாசி முதலிய இடங்களுக்கும் அருப்புக் கோட்டை முதலிய இடங்களுக்கும் மத்திய பாகமாகவும் இருப்பதாகும். 

ஆகவே இந்த வருஷம் மாகாண மகாநாடு விருதுநகரில் நடை பெறுதல் மிக்க நலமென்றே கருதுகிறோம். மகாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராய் திரு. W.P.A. சௌந்திர பாண்டியன் அவர்களும், மகாநாட்டு காரியதரிசிகளாய் திருவாளர்கள் செந்தில் குமார நாடார். M.V. ராமசாமி முதலியவர்களும் மற்றும் பல காரியங்களுக்கு திருவாளர் அருப்புக் கோட்டை கோபால கிருஷ்ணசாமி நாயக்கர், சிவகங்கை 5. இராமச்சந்திரன். முருகப்பா முதவியவர்களும் பிரதானமாக இருந்து துவக்கப்பட்டால் மகா நாடு கண்டிப்பாய் இதுவரை நடந்து வந்ததைப் பார்க்கிலும் விசேஷமாக நடைபெறக்கூடும் என்பதில் நமக்கு எவ்வித ஐயமுமில்லை. 

தலைவர் ஸ்தானத்திற்கு சென்ற வருஷம் போலவே வட நாட்டி லிருந்து ஒரு பெரும் சீர்திருத்தவாதியாகவும், தலைகீழ் கிளர்ச்சிக்காரராகவும் பார்த்து ஒரு கனவானை திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தயவால் அழைத்து வரலாம் என்கிற தைரியம் இருக்கிறது. இம்மகாநாட்டில் இன்னும் முற்போக்கான பல தீர்மானங்கள் செய்யப்பட வேண்டியதாகவும் அமுலில் நடத்த வேண்டியதாகவுமிருப்பதால் தமிழ்நாட்டு இளைஞர்கள் யாவரும் தவறாமல் பங்கு எடுத்து உழைத்து வெற்றி பெறச்செய்ய வேண்டியதவசி யமாகும். தண்ணீர் சௌகரியத்தை உத்தேசித்து அதே சமயத்தில் வேறு சில மகாநாடுகளும், 3, 4 நாட்களுக்கு நடத்த உத்தேசிக்கப் பட்டிருப்பதாய்த் தெரிய வருகிறது. விருதுநகர் கனவான்கள் சுலபத்தில் ஒரு காரியத்தில் தலையிடமாட்டார்கள் என்பதும், தலையிட்டு விட்டால் அவர்களைப் போல எடுத்துக்கொண்ட காரியங்களை ஒழுங்காகவும் வெற்றிகரமாகவும் முடிப்ப வர்கள் அரிது என்பதையும் நாம் தமிழ் நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய தில்லை. இதை உத்தேசித்தே மேல் கொண்ட காரியங்களைப்பற்றி யோசிக்க ஈரோட்டில் இம்மாதம் கடைசி வாரத்தில் நிர்வாகக் கமிட்டி மீட்டிங்கை தலைவர் திரு. பாண்டியன் அவர்கள் கட்டியிருக்கிறார். 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.011931

 
Read 37 times

Like and Follow us on Facebook Page

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.